
பெல்லாரி, செப்.9
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அனைத்து துறைகளிலும் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டதாகவும், பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு தொடர்ச்சியாகப் பெரும் அநீதி இழைக்கப்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி, பாஜக சார்பில் ‘பல்லாரி சலோ’ என்ற பெயரில் பிரம்மாண்ட நடைபயணம் மேற்கொாள்ளப்பட்டு வருகிறது.
மாநிலத்தின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும் இந்த 10 நாள் எழுச்சி நடைபயணம், இன்று தனது 8-வது நாளில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்தது.
பழைய தரோஜியில் தொடக்கம்
சண்டூர் தாலுகாவுக்கு உட்பட்ட பழைய தரோஜி கிராமத்தில் இருந்து இன்று காலை சரியாக 9 மணி அளவில் 8-வது நாள் நடைபயணம் மிகவும் ஆவேசமாகத் தொடங்கியது. இதில், சண்டூர் சட்டமன்றத் தொகுதியின் பாஜக முன்னணி தலைவரும், முன்னாள் வேட்பாளருமான பங்கார ஹனுமந்து தலைமை தாங்கி நடைபயணத்தை முன்னெடுத்துச் சென்றார்.
அவருடன் கட்சியின் முக்கிய மாநிலத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் கைகளில் கட்சி கொடிகளை ஏந்தியபடி, மாநில அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு அணிவகுத்துச் சென்றனர்.
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
நடைபயணம் செல்லுமிடமெல்லாம் திரளான மக்கள் திரண்டு வந்து ஆதரவு அளித்து வருகின்றனர். மாநில அரசின் மக்கள் விரோதப்போக்கை அம்பலப்படுத்தும் வகையில் தீவிரமடைந்து வரும் இந்த ‘பல்லாரி சலோ’ போராட்டத்தால், கர்நாடக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பும் சூடும் தொற்றிக்கொண்டுள்ளது.












