
தைவான், ஆகஸ்ட் 20- ஒரு நாட்டின் அரசாங்கம் தனது குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.30,000 பணத்தை டெபாசிட் செய்கிறது என்றால், உங்களால் நம்ப முடிகிறதா? இதற்காக எந்தக் கடனும் வாங்காமல், தனது வருவாய் உபரியில் இருந்து அதை வழங்குகிறது. ஆச்சரியமாக இருக்கிறதா?\ வரி வருவாயிலும், தொழில்நுட்பத்தினால் கிடைத்த லாபத்திலும் ஈட்டிய ‘உபரி நிதி’-யை மக்களுக்கே திரும்பக் கொடுக்கும் ஒரு நாட்டைக் காண்பது மிகவும் அரிது. கிழக்கு ஆசியாவின் சிறிய தீவு நாடான தைவான், செயற்கை நுண்ணறிவு மூலம் பெற்ற அசுர லாபத்தை மக்களுக்கே பகிர்ந்தளித்து உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.ஒரு நாடு தனது மக்கள் நலனுக்காக எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பதற்கு தைவான் அரசு எழுதியிருக்கும் புதிய வரலாற்று விளக்கம் இது. இது ‘இலவசம்’ இல்லை… ஒரு நாட்டின் அபாரமான ‘பொருளாதார வளர்ச்சி’யின் உச்ச அடையாளம்! தைவான் பொருளாதார அதிசயம்ப சிபிக் பெருங்கடலில், சீனக் கண்டத்தின் கிழக்குக் கரைக்கு அப்பால் அமைந்த குட்டி தீவுதான் தைவான். சீனாவில் இருந்து பிரிந்தாலும், தங்களை தனி தேசம் என்று தைவான் அடையாளப்படுத்திக் கொண்டுள்ளது. ஆனால், தைவான் தங்கள் ஆளுகைக்கு உட்பட்டது என்று சீனா இப்போதும் கூறி வருகிறது. இது அரை நூற்றாண்டுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே மோதலாக நீடிக்கிறது. 1960-களில் விவசாய நாடாக இருந்த தைவான், இன்று உலகின் 22-வது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. இதைப் ‘பொருளாதார அதிசயம்’ (Taiwan Miracle) என்பர். தைவானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 76 சதவீதம் ஏற்றுமதிதான். 2025-ம் ஆண்டில் தைவானின் மொத்த வர்த்தகம் 1.12 டிரில்லியன் டாலர்கள். செமி கண்டக்டர், செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஏற்றுமதி ஆகியவைதான் தைவானின் ஏற்றுமதியில் 80 சதவீதம் அடங்கியுள்ளது.















