
ஜெய்ப்பூர்: ஜனவரி 26 –
குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு ராஜஸ்தானில் 10 ஆயிரம் கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்டம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெடிபொருட்களை கைப்பற்றியுள்ள போலீசார் இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டின் 77-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ணக்கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். கடமைப் பாதையில் நடைபெறும் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் ஏற்றுக்கொள்கிறார்.
மாநில தலைநகரங்களில் மாநில ஆளுநர்கள் கொடியேற்றி வைக்கின்றனர். குடியரசு தினவிழாவையொட்டி நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதை தடுக்க விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியிலும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசாருக்கு அதிநவீன ஏஐ கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, ராஜஸ்தானின் நாக்பூரில் உள்ள ஒரு தோட்டம் ஒன்றில் 10 ஆயிரம் கிலோ அமோனியம் நைட்ரேட் கைப்பற்றப்பட்டுள்ளது. இது வெடிபொருட்களுக்கு பயன்படுத்தக்கூடிய மூலப்பொருள் ஆகும். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இரவு ஹர்சவுர் கிராமத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் 187 மூட்டைகளில் அமோனியம் நைட்ரேட் பதுக்கி வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற கார் குண்டு வெடிப்புக்கு அமோனியம் நைட்ரேட் உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இன்றி பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கும் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இதனால், குடியரசு தின நாளில் கைப்பற்றப்பட்டுள்ள இந்த வெடிபொருட்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏதேனும் சதி திட்டத்துடன் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஹர்சவுர் கிராமத்தை சேர்ந்த சுலேமன் கான் என்பவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அமோனியம் நைட்ரேட் மட்டும் இன்றி பெரிய எண்ணிக்கையில் வெடிபொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். ஒன்பது அட்டைப் பெட்டிகளில் வெடிபொருட்களும், 12 அட்டைப் பெட்டிகள் மற்றும் 15 பண்டல்களில் நீல நிற வெடிமருந்துத் திரிகளும், 12 அட்டைப் பெட்டிகள் மற்றும் ஐந்து பண்டல்களில் சிவப்பு நிற வெடிமருந்துத் திரிகளும் கைபற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் கட்ட விசாரணையில் சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளுக்காக வெடிபொருட்களை இவர் சப்ளை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. எனினும், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.













