
டாக்கா, டிச. 26- வங்கதேசத்தில் இப்போது மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பித்துள்ளது. அங்குள்ள சிறுபான்மை இந்து மதத்தினர் மீது மோசமான வன்முறைகள் அரங்கேறி வருகிறது. இதற்கிடையே இப்போது இந்தியாவில் வசித்து வரும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். யூனுஸ் அரசே இந்த வன்முறைக்குக் காரணம் என்றும் சாடியுள்ளார். வங்கதேசத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியது. இதனால் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஹசீனாவும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதற்கிடையே வங்கதேசத்தில் இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. அங்கு வசிக்கும் இந்து சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. படுகொலை மைமன்சிங்கில் தீபு சந்திர தாஸ் என்ற தொழிற்சாலை ஊழியர், சக ஊழியரால் அடித்துக் கொல்லப்பட்டார். அவர் நபிகள் நாயகத்தை அவமதித்தாக சொல்லப்பட்டது. இருப்பினும், பிறகு அது பொய்யான புகார் என்பது தெரிய வந்தது. சந்திர தாஸை அடித்துக் கொன்றது மட்டுமின்றி, அவரது உடலை பொது இடத்தில் தீ வைத்து எரித்ததாகவும் புகார்கள் எழுந்தன. வங்கதேசத்தில் இதுபோல சிறுபான்மையினர் மீதான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இது தொடர்பாகச் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். தனது கிறிஸ்துமஸ் தின உரையில் யூனுஸ் ஆட்சியை ஹசீனா கடுமையாக விமர்சித்துள்ளார்.

















