
ஹாசன்: மே 29-
குழந்தையை விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததாலும், கூடுதல் வரதட்சணை தராததாலும் மனைவியை கணவரே அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் ஹாசனில் நடந்துள்ளது. இதுதொடர்பாக கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் நகரைச் சேர்ந்தவர் குல்ஷீர் பானு (வயது 31). இவருக்கும், சன்னராயப்பட்டணா திப்புநகரைச் சேர்ந்த சைஃபுல்லா (37) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.
ஆரம்பத்தில் நன்றாகச் சென்ற இவர்களது குடும்ப வாழ்க்கையில், சைஃபுல்லாவின் குடிப்பழக்கம் மற்றும் சூதாட்ட மோகத்தால் புயல் வீசியது. பண நெருக்கடி காரணமாக, தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தை ஒன்றை சைஃபுல்லா சில ஆண்டுகளுக்கு முன்பு ரகசியமாக விற்றுள்ளார்.
இதனை குல்ஷீர் பானு கடுமையாக எதிர்த்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், சைஃபுல்லா தங்களது மற்றொரு குழந்தையையும் பணத்திற்காக விற்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதற்கு குல்ஷீர் பானு சம்மதிக்கவில்லை. “குழந்தையை விற்காவிட்டால் பெற்றோர் வீட்டில் இருந்து பணம் வாங்கி வர வேண்டும்” என்று கூறி சைஃபுல்லாவும், அவரது குடும்பத்தினரும் குல்ஷீர் பானுவை சித்திரவதை செய்துள்ளனர்.
கடந்த பக்ரீத் பண்டிகை அன்று மதியம், குல்ஷீர் பானு அப்பகுதியில் உள்ள ஏரியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சைஃபுல்லா மற்றும் அவரது பெற்றோர், குல்ஷீர் பானுவுடன் தகராறில் ஈடுபட்டு அவரை வலுக்கட்டாயமாக வீட்டுக்கு இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து அவரை கொடூரமாகத் தாக்கியதில் குல்ஷீர் பானு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சன்னராயப்பட்டணா நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குல்ஷீர் பானுவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மகள் கொலை குறித்து குல்ஷீர் பானுவின் தந்தை பாபு போலீசில் புகார் அளித்தார். “என் மகளை வரதட்சணை கேட்டு தொடர்ந்து சித்திரவதை செய்தனர். பலமுறை பஞ்சாயத்து பேசியும் கேட்காமல், இப்போது என் மகளைக் கொன்றுவிட்டார்கள்” என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த கணவர் சைஃபுல்லாவை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த கொலையில் தொடர்புடைய மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


















