கேரளாவில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைத்தார் பிரதமர்

திருவனந்தபுரம், ஜன. 24- கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். இங்கு சிஎஸ்ஐஆர்- என்ஐஐஎஸ்டி புதுமை கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு மையத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பி.எம்.ஸ்வாநிதி திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, பயனாளிகள் பலருக்கு கடன்கள் மற்றும் கடன் அட்டைகளை வழங்கினார். ஸ்ரீ சித்ரா திருநல் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் நவீன ரேடியோ அறுவை சிகிச்சை மையத்துக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். பூஜா புரா தலைமை தபால் நிலையத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மூன்று அம்ரித் பாரத் ரயில்கள், திருச்சூர் – குருவாயூர் பயணிகள் ரயில்கள் ஆகியவற்றையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பாஜக கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளால், கேரளாவின் வளர்ச்சியில் புதிய உத்வேகம் ஏற்பட்டுள்ளதை மக்கள் உணர்ந்துள்ளனர். அம்ரித் பாரத் ரயில்கள் மூலம் கேரளாவில் ரயில் போக்குவரத்து இணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது கேரளா, தமிழகம், கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திரா இடையே போக்குவரத்தை அதிகரிக்கும். குருவாயூர் – திருச்சூர் இடையிலான புதிய பயணிகள் ரயில் பக்தர்களின் பயணத்தை எளிதாக்கும். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் ஒட்டுமொத்த நாடும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இதற்காக நமது நகரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. கேரளா மற்றும் நாட்டில் உள்ள ஏழைகளுக்காக பி.எம்.ஸ்வாநிதி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகள் முன்பு சில நூறு ரூபாய்களை கூட அதிக வட்டிக்கு வாங்கினர். அவர்களின் வாழ்க்கை பிரதமரின் ஸ்வாநிதி திட்டம் மூலம் மாறியுள்ளது. லட்சக்கணக்கான சாலையோர வியாபாரிகள் வங்கிகளில் கடன் பெறுகின்றனர். இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. அவர்களுக்கு மத்திய அரசு கடன் அட்டையும் வழங்கியுள்ளது. கேரளாவில் 10,000 பேருக்கு பிஎம் ஸ்வாநிதி கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கேரளாவில் தொடங்கப்பட்டுள்ள சிஎஸ்ஐஆர் புதுமை கண்டுபிடிப்பு மையம் மற்றும் ரேடியோ அறுவை சிகிச்சை மையம் ஆகியவை கேரளாவை அறிவியல் மற்றும் சுகாதார மையமாக மாற்றும். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு நனவாக வளர்ச்சியடைந்த கேரளா அவசியம்.