Home விளையாட்டு கே.எல்.ராகுல் செய்த தவறுதான் தோல்விக்கு காரணம்.. டெல்லி கேப்டன் அக்சர் கடும் அதிருப்தி

கே.எல்.ராகுல் செய்த தவறுதான் தோல்விக்கு காரணம்.. டெல்லி கேப்டன் அக்சர் கடும் அதிருப்தி

டெல்லி, ஏப்ரல் 22- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமே முன்னணி வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் பதும் நிசங்கா செய்த அந்த இரண்டு தவறுகள்தான் என டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் வெளிப்படையாக சாடியுள்ளார். கைகளில் இருந்த ஆட்டம் எப்படி கைநழுவிப் போனது என்பது குறித்து அக்சர் படேல் கூறிய கருத்துக்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளது. IPL 2026 Follow Every Match. Track Every Moment. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 242 ரன்கள் குவித்து அசத்தியது. இதற்குக் காரணம் அந்த அணியின் இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா தான். 68 பந்துகளைச் சந்தித்த அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 135 ரன்களைக் குவித்து மிரட்டினார். உலக டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் இவர், டெல்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சாளர்களைக் கதறவிட்டார். டெல்லி கேப்பிடல்ஸ் அணி 195 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஹைதராபாத் அணி டெல்லியை 48 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது. ஆனால், அபிஷேக் சர்மா இந்த பிரம்மாண்டமான ஸ்கோரை எட்டுவதற்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி செய்த பீல்டிங் சொதப்பல்களே முக்கிய காரணம். ஆட்டத்தின் மிக முக்கிய கட்டத்தில், அபிஷேக் சர்மாவை ரன் அவுட் செய்யக் கிடைத்த ஒரு சுலபமான வாய்ப்பை விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் நழுவவிட்டார். அதேபோல, அவர் கொடுத்த ஒரு எளிமையான கேட்ச் வாய்ப்பையும் பதும் நிசங்கா கோட்டைவிட்டார். இதைப் பயன்படுத்திக் கொண்ட அபிஷேக் சர்மா, டெல்லி அணியை நிர்மூலமாக்கினார். தோல்வி குறித்துப் பேசிய டெல்லி கேப்டன் அக்சர் படேல், “அந்த ரன் அவுட் மற்றும் கேட்ச் வாய்ப்பை நாங்கள் சரியாகப் பிடித்திருந்தால், அபிஷேக் சர்மா இவ்வளவு பெரிய ஸ்கோரை அடித்திருக்கவே மாட்டார். நாங்கள் செய்த தவறுகளுக்கு மிகப்பெரிய விலையைக் கொடுத்துள்ளோம். சிறப்பான பீல்டிங் என்பது நம் கைகளில் உள்ளது, அதை நாங்கள் சரியாகச் செய்திருக்க வேண்டும். இருப்பினும் இதற்காக அணியில் எந்த மாற்றத்தையும் செய்யப் போவதில்லை. இதை ஒரு மோசமான நாளாகக் கருதி மறந்துவிட வேண்டியதுதான்” என்றார்.ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா கூறுகையில், “2024 ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அளித்த ஊக்கம்தான் எனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியது. பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி மற்றும் முன்னாள் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் இளம் வீரர்களுக்கு முழு சுதந்திரம் அளித்தனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த வீரர்கள் சுதந்திரமாக விளையாடுவதையே விரும்புவார்கள். மைதானத்தில் அமர்ந்து எனது ஆட்டத்தைப் பார்த்த எனது தந்தை ராஜ்குமார் சர்மாவிற்கும் நன்றி” என்றார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் இஷான் கிஷன் கூறுகையில், “பந்து மெதுவாக வரும் ஆடுகளத்தில் 200 ரன்களுக்கு மேல் குவிப்பது சாதாரண விஷயமல்ல. இந்த ஸ்கோர் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துகொள்ள ஆரம்பத்தில் 2 அல்லது 3 பந்துகளை நிதானமாக எதிர்கொண்டு, அதன்பின் எங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஒவ்வொரு போட்டியாகக் கவனம் செலுத்துவதே எங்கள் திட்டம்” எனத் தெரிவித்தார்