
லக்னோ, ஏப்ரல் 22- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. முதல் 4 ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த அந்த அணி கடைசியாக விளையாடிய 2 ஆட்டங்களிலும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறியது. பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி மற்றும் துருவ் ஜுரெல் ஆகிய முதல் மூன்று வீரர்களே பலமாக இருந்து வருகின்றனர். இவர்கள் சோபிக்கத் தவறும் போதெல்லாம் அந்த அணி பெரும் போராட்டத்தை எதிர்கொள்கிறது. தோல்வி அடைந்த 2 ஆட்டங்களில் ஹைதராபாத் அணிக்கு எதிராக தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ரன்னிலும், வைபவ் சூர்யவன்ஷி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து இருந்தனர். ஆனால் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்த ஜோடி 8 ஓவர்களில் 81 ரன்கள் விளாசியது. இருப்பினும் நடுவரிசையில் ரியான் பராக், துருவ் ஜூரெல், ஷிம்ரன் ஹெட்மயர், டோனோவன் பெரைரா உள்ளிட்டோரிடம் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. சஞ்சு சாம்சனின் வெளியேற்றத்துக்குப் பிறகு, எதிர்பாராத விதமாக கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ரியான் பராக், பேட்டிங்கில் மிகவும் மோசமான காலக்கட்டத்தை எதிர்கொண்டுள்ளார். நடப்பு தொடரில் அவர், இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 3 முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 20 மட்டுமே. அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜாவிடம் இருந்து வெற்றிக்கான பங்களிப்பு வெளிப்படவில்லை. அதிரடி வீரரான ஷிம்ரன் ஹெட்மயர் 4 ஆட்டங்களில் விளையாடி வெறும் 39 ரன்களே எடுத்துள்ளார். இவர்கள் பார்முக்கு திரும்பினால் மட்டுமே அணியின் பலம் அதிகரிக்கும். பீல்டிங்கிலும் ராஜஸ்தான் அணி முன்னேற்றம் காண வேண்டும். இருப்பினும் அது அவ்வளவு எளிதாக இருக்காது. ஏனெனில் பஞ்சாப் கிங்ஸ் அணியால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சு வரிசை சிதைக்கப்பட்டு இருந்தது. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 254 ரன்களை குவித்து மிரட்டியிருந்தது. பிரியன்ஸ் ஆர்யா, கூப்பர் கானொலி ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 13.2 ஓவர்களில் 182 ரன்களை வேட்டையாடி இருந்தது. இவர்களின் அதிரடி ஆட்டம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்துவீச்சை நிலைகுலையச் செய்து, கடும் அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. இதில் பிரின்ஸ் யாதவ் மட்டுமே நம்பிக்கையூட்டும் ஒளிக்கீற்றாகத் திகழ்ந்தார். அவர், அந்த ஆட்டத்தில் 25 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை கைப்பற்றிருந்தார். வேகப்பந்து வீச்சாளர்களான ஆவேஷ் கான், முகமது ஷமி ஆகியோர் பந்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். அதேபோல், மணிமாறன் சித்தார்த்தின் பந்துவீச்சிலும் அதிக ரன்கள் கசிந்துள்ளன. எனினும் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலவீனமான மிடில் ஆர்டர் பேட்டிங்கை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் குறிவைக்கக்கூடும். அதே நேரத்தில், லக்னோ அணியின் பேட்டிங் வரிசையும் ஒரு நிலையற்ற தன்மையிலேயே காணப்படுகிறது.





















