Home மாவட்டங்கள் பெங்களூர் கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களில் ஜி.பி.எஸ் – அவசர பட்டன் வசதி

கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களில் ஜி.பி.எஸ் – அவசர பட்டன் வசதி

பெங்களூரு, ஆக. 28: கர்நாடக மாநில அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் இனி நவீன தொழில்நுட்பத்துடன் ஹேட்டெக் ஆக மாறவுள்ளன. இதன் மூலம் பேருந்துகள் தற்போது எங்கு வந்துகொண்டிருக்கின்றன, எத்தனை மணிக்கு வரும் என்ற உடனுக்குடனான நேரலை தகவல்களைப் பயணிகள் எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும்.
டெல்லியில் நடந்த கொடூரமான நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு, நாட்டில் உள்ள அனைத்து வணிக ரீதியிலான (மஞ்சள் போர்டு) வாகனங்களிலும் ‘வாகன இருப்பிட கண்காணிப்பு சாதனம்’ மற்றும் ‘பானிக் பட்டன்’ (அவசர பட்டன்) பொருத்த மத்திய அரசு கட்டாயமாக்கியது.
அந்த உத்தரவின்படி கர்நாடக போக்குவரத்து துறையும் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது.
அரசு போக்குவரத்துக் கழக அமைப்பிடம் உள்ள 6,063 பேருந்துகளில், ஏற்கனவே 2,344 பேருந்துகளில் ஜி.பி.எஸ் அடிப்படையிலான இருப்பிட கண்காணிப்பு சாதனங்கள் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டு விட்டன. மீதமுள்ள 3,743 பேருந்துகளுக்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பொருத்துவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பிட கண்காணிப்பு சாதனம் பொருத்தப்படுவதால், பேருந்து தற்போது எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறது என்பதைப் பயணிகள் தங்கள் செல்போன் மூலமாகவே விரல் நுனியில் துல்லியமாகக் கண்காணிக்க முடியும்.
அனைத்து பேருந்துகளின் இயக்கத்தையும்
ஒரே இடத்தில் இருந்து தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காகப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தனியாக ‘கட்டுப்பாட்டு மையம்’ உருவாக்கப்பட்டு வருகிறது.
பயணத்தின் போது பெண்களுக்கு ஏதேனும் ஆபத்தோ, அசம்பாவிதமோ அல்லது பயணிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவோ ஏற்பட்டால், பேருந்தில் உள்ள அவசர பட்டனை அழுத்தலாம். உடனடியாக இந்தத் தகவல் கட்டுப்பாட்டு மையத்தை அடையும். அதைத் தொடர்ந்து போக்குவரத்து அதிகாரிகளும் காவல் துறையினரும் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நடவடிக்கை எடுப்பார்கள்.