கொடூர தாக்குதலை உடல் கேமராவில் பதிவு செய்த பயங்கரவாதிகள்

பஹல்காம், ஏப்ரல் 24- ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணியரை குறிவைத்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், உடல் கேமராவில் கொடூர செயலை படம்பிடித்த நோக்கம் என்ன என்பது வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல் குறித்து உளவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து செயல்படும், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான, லஷ்கர் – இ – தொய்பாவின் உள்ளூர் கிளையான, ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்’ அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். அடர்ந்த பைன் காட்டில் பதுங்கியிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், ராணுவ சீருடை, குர்தா – பைஜாமா உடை அணிந்து வந்து, அப்பாவி மக்களை சுட்டுக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர். சமீபத்தில் பைசரன் பள்ளத்தாக்கில் ஊடுருவிய பாக்., பயங்கரவாதிகளும், இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். லஷ்கர் – இ- தொய்பாவின் உயர்மட்ட தளபதி காலித் என்கிற சைபுல்லா கசூரி, இந்த தாக்குலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். உடல் கேமராக்கள் மற்றும் ஹெல்மெட் பொருத்தப்பட்ட கேமராக்களை அணிந்து, தாக்குதலின் முழு நிகழ்வுகளையும் பயங்கரவாதிகள் பதிவு செய்துள்ளனர். இந்த தாக்குதல் வீடியோக்களை தங்களது ஆதரவாளர்களிடம் காட்டி, நிதி வசூல் செய்வது, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகள் வராமல் தடை செய்வது ஆகியவையே நோக்கம் என தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள், ராணுவ தர ஆயுதங்களை தாக்குதலுக்கு பயன்படுத்தி உள்ளனர்.தாக்குதலுக்கு முன்னதாக, உள்ளூர் நபர்களின் உதவியுடன், பைசரன் பள்ளத்தாக்கு பகுதியை பயங்கரவாதிகள் வேவு பார்த்துள்ளனர். சரியாக திட்டமிட்டு, பாதுகாப்பு படையினர் இல்லாத நேரம் பார்த்து, இந்த தாக்குதலை அவர்கள் அரங்கேற்றி உள்ளனர். பயங்கரவாதிகளில் இருவர், உள்ளூரைச் சேர்ந்த ஆதில், ஆசிப் என்பது தெரிய வந்துள்ளது. தப்பியோடிய பயங்கரவாதிகளை பிடிக்கும் பணி முழு வீச்சில் நடக்கிறது.