கோரக்பூரில் ஆயுஷ் பல்கலை திறந்து வைத்தார் ஜனாதிபதி

கோரக்பூர் , ஜூலை 2
உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில், மஹா யோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலையை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார்.
உ.பி.,க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோரக்பூர் மாவட்டத்தின்
பதாத் என்ற இடத்தில், 268 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மஹா யோகி குரு கோரக்நாத் ஆயுஷ் பல்கலையை நேற்று திறந்து வைத்தார்.
அவர் பேசுகையில், ‘’இந்த பல்கலை நாட்டின் வளமான பண்டைய மரபுகளின் நவீன மையமாக உள்ளது.
இது, உ.பி., மட்டுமின்றி நாடு முழுதும் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளின் வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். ’’பல்கலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள
நவீன வசதிகள் தற்போது ஏராளமான மக்களுக்கு கிடைக்கின்றன. இந்த பல்கலை உடன் இணைக்கப்பட்டுள்ள, 100 ஆயுஷ் கல்லுாரிகளும் பயனடைந்து வருகின்றன,’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‘’கோரக்பூரில் சுகாதாரம் மற்றும் கலாசாரத்தின் ஒரு புதிய சகாப்தம் துவங்குகிறது.
‘’பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், இந்த பல்கலை இந்திய அறிவு மரபுகள், யோகா, ஆயுர்வேதம் மற்றும் முழுமையான ஆரோக்கியத்தின் கலங்கரை விளக்கமாகவும், மருத்துவக் கல்வியின் மையமாகவும் விளங்கும்,’’ என்றார்.