
கோவை: ஆக. 30 –
கோவையில் விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாநகர பகுதியில் 722 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இதில் கடந்த 27-ந் தேதி 20 சிலைகளும், நேற்று 418 சிலைகளும் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. நாளை ஞாயிற்றுக்கிழமை அன்று மீதமுள்ள 284 சிலைகள் கரைக்கப்பட உள்ளன. இதையொட்டி நாளை கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது
இதுதொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- கோவையில் ஞாயிறு அன்று (ஆகஸ்ட் 31 ) விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்படுகிறது. எனவே அன்றைய தினம் நேரத்துக்கு தகுந்தவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரூர் செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் சாலை, சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.காந்திபுரம், டவுன்ஹாலில் இருந்து வைசியாள்வீதி, சலீவன்வீதியில் செல்லும் வாகனங்கள் உக்கடம், பேரூர் பைபாஸ் சாலை, சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்வபுரம் சென்று செல்லலாம். உக்கடம் வழியாக திருச்சி சாலை செல்லும் வாகனங்கள் சுங்கம் பைபாஸ் வழியாக செல்ல வேண்டும். உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை செல்லும் வாகனங்கள் ஒப்பணக்காரவீதி 5 கார்னர், கடைவீதி, லங்கா கார்னர், ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று செல்ல வேண்டும்.கோவை தடாகம் சாலையில் இருந்து மாநகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜி.சி.டி. சந்திப்பில் இடதுபுறம் திரும்பி பாரதி பார்க், ஹோம் சயின்ஸ் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டும். மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் சங்கனூர் பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கணபதி, காந்திபுரம் வழியாக செல்லலாம்.
கோவை பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மேல்நிலைப்பள்ளி அருகில் வலதுபுறம் திரும்பி பேரூர் பைபாஸ் சாலை வழியாக உக்கடம் வந்து செல்லலாம். பேரூரில் இருந்து தடாகம் சாலைக்கு செல்லும் வாகனங்கள் சிவாலயா சந்திப்பு, பனமரத்தூர், பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம் சுகர்கேன் சாலை வழியாக மருதமலை சாலை அடைந்து லாலி ரோட்டில் இடதுபுறமாக திரும்பி தடாகம் சாலையில் செல்லலாம்.கோவை மருதமலையில் இருந்து மாநகருக்குள் வரும் வாகனங்கள் லாலி சாலை இடதுபுறம் திரும்பி தடாகம் சாலை, ஜி.சி.டி., பாரதிபார்க் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்லலாம். அவினாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் கூட்ஸ்செட் ரோடு, மரக்கடை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி என்.எச்.ரோடு, 5 கார்னர், டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்ல வேண்டும்.