சபரிமலையில் குவியம் பக்தர்கள்

திருவனந்தபுரம்: நவ. 16 லட்சக்கணக்கான பக்தர்களின் சரண கோஷத்திற்கு இடையே நேற்று மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு உற்சவத்திற்காக சபரிமலை நடை திறக்கப்பட்ட நிலையில், இன்று ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் மண்டல மட்டும் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் அனுசரிக்கப்படுகிறது. 41வது நாள் மண்டல பூஜை நடக்கிறது. இந்த நிலையில் நவம்பர் 16ஆம் தேதியான இன்று மண்டல பூஜை தொடங்கியது.
இதற்காக நேற்று மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டது. மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றினர். தொடர்ந்து 18-ஆம் படி வழியாக சென்று ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்க்கப்பட்டது. இன்று அதிகாலை 3 மணிக்கு புதிய மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து தந்திரி பிரம்மாதத்தன் ஐயப்பன் சிலைக்கு நெய்யாபிஷேகம் செய்து மண்டல பூஜையை தொடங்கி வைத்தார். இதற்காக இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். மேலும் ஏற்கனவே மாலை அணிந்தவர்கள் ஐயப்பனை காண சபரிமலைக்கு படை எடுத்துள்ளனர். இந்த நிலையில் சபரிமலை மண்டல பூஜைக்கு வரும் பக்தர்களுக்காக இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இடுக்கி மாவட்டம் சத்திரம், புல்மேடு வழியாக காட்டுப் பாதையில் சபரிமலைக்கு நடை பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதனையடுத்து இன்று காலை ஆறு மணிக்கு பூஜைக்கு பின் அந்த வழியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சத்திரம் பகுதியிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீயணைப்புத் துறையினர் மருத்துவக் குழுவினர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் சத்திரப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு முதல் சத்திரத்தில் இரவு நேரங்களில் தங்கும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. சத்திரம் – புல்மேடு இடையே சுமார் 6 கிமீ தூரத்திற்கு பக்தர்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இடுக்கி மாவட்டத்தில் மண்டலகால மகர விளக்கு பூஜையை முன்னிட்டு குமுளி, வண்டிப்பெரியாறு, சத்திரம், புல்மேடு, பீர்மேடு, குட்டி கானம், பெருவந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனவே இடுக்கி வழியாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.