சரியும் டாலர் சாம்ராஜ்ஜியம் ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை

நியூயார்க்: ஜனவரி 27-
நேற்று அமெரிக்க டாலர் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்த அதே வேளையில், சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின்
விலை வரலாற்றிலேயே முதல் முறையாக $5,000 (சுமார் 5,000 டாலர்) என்ற மைல்கல்லைக் கடந்து சாதனை படைத்துள்ளது. சாதாரண முதலீட்டாளர்கள் மட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய நிதி நிறுவனங்களும், மத்திய வங்கிகளும் தங்கத்தை நோக்கிப் படையெடுப்பதால் இந்த விலை உயர்வு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) தங்கக் கையிருப்பு இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, கடந்த ஜனவரி 16-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1,400 கோடி டாலர் உயர்ந்துள்ளது. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத மிகப்பெரிய வாராந்திர உயர்வாகும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த உயர்வில் மூன்றில் ஒரு பங்கு ரிசர்வ் வங்கியிடம் உள்ள 880 டன் தங்கத்தின் மதிப்பு அதிகரித்ததால் ஏற்பட்டுள்ளது.