
திருப்பத்தூர்: ஜூலை 15 –
காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரயில்வே மற்றும் தமிழக அரசு தலா ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த கணவன் – மனைவி இருவரும், திருப்பூரில் தங்கி அங்கு உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். கர்ப்பமாக இருந்த மனைவியை, கடந்த பிப்ரவரி 6-ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக சித்தூர் மாவட்டத்துக்கு அவரது கணவர் ரயிலில் அனுப்பி வைத்தார். கோவையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலின் பொது பெட்டியில் அந்த கர்ப்பிணி பயணம் செய்தார்.
மறுநாள் 7-ம் தேதி நள்ளிரவு 12.10 மணி அளவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் – கே.வி.குப்பம் இடையே ரயில் சென்றபோது, ரயிலில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த அவர் சென்றார். அப்போது, கழிப்பறை அருகே அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் அவரை வழிமறித்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, ஓடும் ரயிலில்இருந்து அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்ட இளைஞர், வேறு பெட்டிக்கு மாறி தப்பினார்.