
சென்னை: ஆக. 21-
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மூலம் ஆக்சிஜன் மாஸ்க் பொருத்தப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கானோர் தினசரி சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு நேற்று முன்தினம் இரவு தீவிர மூச்சுத்திணறல் காரணமாக நோயாளி ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.அப்போது அங்கு பணியிலிருந்த ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு அவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் நாடித்துடிப்பு பரிசோதனை செய்யப்பட்டு, ஆக்ஸிஜன் மாஸ்க் வைப்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உரிய மருத்துவப் பயிற்சி இல்லாத நபர்களைக் கொண்டு அவசர சிகிச்சை அளிக்கும் இத்தகைய செயல் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
எனவே, அலட்சியமாகச் செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகம், பணியாளர்கள் மீது மாவட்ட நிர்வாகமும், மக்கள் நல்வாழ்வுத் துறையும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது, “இதுகுறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.













