
சித்ரதுர்கா: ஆக. 21-
பெங்களூரில் இருந்து கோவா நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் சுற்றுலா பஸ், ஹிரியூர் தாலுகா ஐமங்கலா அருகே நள்ளிரவில் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கொடூர விபத்தில் பஸ் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பயணிகள் படுகாயமடைந்தனர்.
உயிரிழந்தவர்கள் பஸ் டிரைவர் குருபிரசாத் மற்றும் கிளீனர் சங்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த 20 பேரில் ஒருவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு சித்ரதுர்கா மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐமங்கலா அருகே தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்றபோது, டிரைவரின் தூக்க கலக்கம் காரணமாக பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்ததாக அஞ்சப்படுகிறது. இதில் பஸ்ஸின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. ‘ஐலேண்ட்’ என்ற அந்த பச்சைப் நிற பஸ்ஸில் மொத்தம் 53 பயணிகள் பயணித்துள்ளனர்.
பஸ்ஸில் பயணித்தவர்கள் அனைவரும் பெங்களூரு பன்னேருகட்டா சாலையில் உள்ள அரிகேரே பகுதியில் இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஆவர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இந்த மாணவிகள், கோவா சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் பெங்களூரு திரும்பிச் சென்றபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்து குறித்து தகவலறிந்த ஐமங்கலா போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்புப் பணிகளை மேற்கொண்டு கவிழ்ந்த பஸ்சையும் மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.













