
செயின்ட் லூயிஸ், ஆகஸ்ட் 20- சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் தொடர் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர். பிரக்ஞானந்தா, உலக சாம்பியனான சகநாட்டைச் சேர்ந்த டி.குகேஷுடன் மோதினார். இதில் வெள்ளை காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 36-வது நகர்த்தலின் போது வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா, நேரலை உலக தரவரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் லேவோன் அரோனியன், உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தோரோவை 41-வது நகர்த்தலின் போது தோற்கடித்தார். இந்திய கிரிக்கெட் மகளிர் அணி அறிவிப்பு: ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா நீக்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சு வீராங்கனை ரேணுகா சிங் தாக்குர் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்திய அணி விவரம்: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஹர்லீன் தியோல், தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரேணுகா சிங் தாக்குர், அருந்ததி ரெட்டி, ரிச்சா கோஷ், கிராந்தி கவுட், அமன்ஜோத் கவுர், ராதா யாதவ், சாரணி, யாஷ்டிகா பாட்டியா, ஸ்நே ராணா. அல்கராஸ், ஸ்வியாடெக் சாம்பியன்: அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் சின்னாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 3-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 7-ம் நிலை வீராங்கனையான இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினியை எதிர்த்து விளையாடினார்.இதில் இகா ஸ்வியாடெக் 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர், 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸுடன் மோதினார். இதில் முதல் செட்டில் கார்லோஸ் அல்கராஸ் 5-0 என முன்னிலையில் இருந்த போது உடல் நலக்குறைவு காரணமாக ஜன்னிக் சின்னர் போட்டியில் இருந்து விலகினார். இதனால் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார். வெண்கலம் வென்றார் மனு பாகர்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற இந்தியாவின் மனு பாகர் 219.7 புள்ளிகள் சேர்த்து வெண்கலப் பதக்கம் வென்றார்.