
மும்பை: ஜன.20-
மகாராஷ்டிர உள்ளாட்சி தேர்தலில் மும்பை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பாஜக 89 வார்டுகளிலும், சிவசேனா (ஷிண்டே அணி) 29 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. ஆளும் கட்சியில் உள்ள இந்த கூட்டணிக்கு மேயர் பதவியை கைப்பற்றும் பெரும்பான்மை உள்ளது. ஆனால் மேயர் பதவியை யார் பெறுவது என்பதில் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தனது கட்சியின் 29 கவுன்சிலர்களை மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஏக்நாத் ஷிண்டே தங்கவைத்துள்ளார்.இதுகுறித்து சிவசேனா (உத்தவ் அணி) மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது: ஷிண்டே ஏற்கெனவே தனது கட்சி கவுன்சிலர்களை 5 நட்சத்திர விடுதியில் சிறை வைத்துள்ளார். இதேபோல் தங்கள் கட்சி கவுன்சிலர்களையும் பாதுகாப்பான இடத்தில் வைக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. யார் யாரைக் கண்டு பயப்படுகிறார்கள்? நீங்கள் தான் ஆளும் கூட்டணி அரசு. இது கேலிக்கூத்தாக உள்ளது.
மும்பை மாநகராட்சியில் நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோமா என்பதை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. அரசியலில் நடைபெறும் மாற்றங்களை ரசித்து கொண்டிருக்கிறோம். மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வென்றதால், உலக பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க சுவிட்சர்லாந்து சென்ற முதல்வர் தேவேந்திர பட்னவிஸுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.













