புதுடெல்லி: ஜூலை 12 –
டெல்லி சீலம்பூர் பகுதியில் இன்று காலை 7 மணிக்கு திடீரென்று 4 மாடி கட்டடம் சீட்டுக்கட்டுப்போல் இடிந்து விழுந்தது. கட்டட இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் மற்ற 6 பேரை மீட்பதற்கான பணி தொடர்ந்து நடந்து வருகிறது. டெல்லி சீலம்பூரில் ஜனதா மஸ்தூர் காலனி உள்ளது. இங்கு 4 மாடி கட்டடம் இருந்தது. ஒரு தரைதளம் + 3 மாடிகள் அந்த கட்டடத்தில் இருந்தன. இந்நிலையில் தான் இன்று காலை 7 மணிக்கு திடீரென்று 4 மாடி கட்டடம் சீட்டுக்கட்டுப்போல் சரிந்து விழுந்தது.
அந்த கட்டடத்தில் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இதுபற்றி உடனடியாக தீயணைப்பு வீரர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 7 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் மீட்பு பணியை தொடங்கினர். முதற்கட்டமாக இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உடனடியாக அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இன்னும் 6 பேர் வரை கட்டட இடிபாடுகளுக்கும் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த பகுதியில் வசிக்கும் மக்களும் தீயணைப்பு துறையினருக்கு உதவி செய்து வருகின்றனர். தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து பொதுமக்களும் கட்டட இடிபாடுகளை அகற்றி மற்றவர்களை மீட்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக தீயணைப்பு வீரர்கள் சார்பில், ‛‛ இந்த கட்டடத்தில் 8 முதல் 10 பேர் வசித்ததாக சொல்கின்றனர். இதில் 3 பெண்கள், 3 குழந்தைகளும் அடங்குவர். 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 6 பேர் வரை இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது’’ என்றனர்.


















