
சென்னை, ஆகஸ்ட் 19- 2025 ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில்லை டி20 அணிக்குள் கொண்டுவருவது குறித்த விவாதம் கிளம்பி உள்ளது. முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வுக்குழுத் தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். “சுப்மன் கில் திடீரென எங்கிருந்து வருகிறார்?” என்ற அவரது நேரடிக் கேள்வி, தேர்வாளர்களின் நிலைப்பாட்டையும், இந்திய டி20 அணியின் எதிர்காலத் திட்டமிடலையும் விவாதத்தின் மையத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஸ்ரீகாந்தின் அனல் பறக்கும் கேள்விகள் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 754 ரன்கள் குவித்து, நான்கு சதங்களுடன் இந்திய டெஸ்ட் கேப்டனாக தனது பயணத்தை அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளார் சுப்மன் கில். இந்த அபாரமான ஃபார்ம், அவரை ஆசிய கோப்பை டி20 அணிக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற குரல்களை எழுப்பியுள்ளது. ஆனால், இந்த யோசனையை ஸ்ரீகாந்த் முற்றிலும் நிராகரிக்கிறார். தனது யூடியூப் சேனலில் பேசிய ஸ்ரீகாந்த், “ஒருவேளை சுப்மன் கில் டி20 அணியின் கேப்டனாக இருந்திருந்தால், அவர் தானாகவே அணிக்குள் வந்திருப்பார். ஆனால், கில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. அப்படி இருக்கும்போது, அவர் திடீரென இப்போது எங்கிருந்து வருகிறார்?” என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மாற்று வீரர்கள் மற்றும் தற்போதைய அணியின் பலம் சுப்மன் கில்லுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் எனக் கூறி இருக்கிறார் ஸ்ரீகாந்த். குறிப்பாக, 2025 ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை அணிக்குள் கொண்டுவர வேண்டும் என அவர் அதிரடியாக கூறி இருக்கிறார்.