
சென்னை: செப். 7-
காவலர் தினத்தை முன்னிட்டு பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்ற தூய்மைப் பணியை சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் நேற்று காலை தொடங்கி வைத்து, கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினார். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கடந்த 1859-ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்டு, நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ஆம் நாள் ஆண்டுதோறும் ‘காவலர் தினமாக’ கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.
காவல் ஆணையர் அமல்ராஜ் தொடங்கி வைத்து தூய்மைப் பணியில் ஈடுபட்டார். போலீஸ் அதிகாரிகள், ஊர்க்காவல் படை வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் என்சிசி, என்எஸ்எஸ் கல்லூரி மாணவ மாணவிகள் என 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, காவலர் தினக் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாகப் பல்வேறு சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
காவல்துறை இசைக்குழு மற்றும் பேக்-பைப்பர் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையின் முக்கிய சந்திப்புகளில் உள்ள எல்இடி, எல்சிடி திரைகளில் ‘காவலர் தினம்’ குறித்த வாழ்த்துச் செய்திகள் மற்றும் விழிப்புணர்வு காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. மேலும், சென்னையின் 4 காவல் மண்டலங்கள் மற்றும் 12 மாவட்டங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்களுடன் இணைந்து போதைப்பொருள் ஒழிப்பு, சைபர் குற்றத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன.












