சேலத்தில் கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீச்சு

சேலம்: ஜூலை 16 –
சேலத்தில் அண்ணா பூங்காவை ஒட்டி நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையின் மீது மர்ம நபர்கள் கறுப்பு நிற பெயின்ட்டை வீசிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் நான்குரோடு அருகே உள்ள அண்ணா பூங்காவை ஒட்டி, சேலம் – ஓமலூர் சாலையோரம் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 11-ல் திறந்து வைத்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையின் முதுகு, முன்புற இடுப்பு பகுதிகளில் கருப்பு பெயின்ட்டை மர்ம நபர்கள் நேற்று இரவு வீசினர். இது இன்று காலையில் தெரியவர, திமுகவினரும் பொதுமக்களும் சிலை அருகே திரண்டனர். இதனிடையே, தகவல் அறிந்த சேலம் மாநகர போலீஸார், சிலை இருக்குமிடத்தில் ஆய்வு மேற்கொண்டு, விசாரணை நடத்தினர்.
சிலை இருக்கும் பகுதியில் கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் குறித்த பதிவு ஏதேனும் உள்ளதாக எனவும், சிலையின் மீது கைரேகை பதிவை கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டனர். முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசப்பட்ட சம்பவம் சேலத்தில் திமுகவினரிடைய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, கருணாநிதி சிலை மீது வீசப்பட்டிருந்த கறுப்பு பெயின்ட் முழுவதும் துடைக்கப்பட்டு, சிலை சுத்தம் செய்யப்பட்டது.