Home செய்திகள் தேசிய செய்திகள் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: தேர்வு ரத்து

ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்: தேர்வு ரத்து

ராஞ்சி: ஆக. 18-
அரசுத் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாணவர் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் JSSC-CGL தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
திங்கட்கிழமை அன்று அம்மாநில அமைச்சரவை கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியதாவது:
“தேர்வு முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும். அது சிறியது, பெரியது என எதுவாக இருந்தாலும் விசாரணை நடைபெறும். இது 2014 முதல் நடைபெற்ற தேர்வுகளுக்கு பொருந்தும்.டிடிபிஎல் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். இது தேர்வு, அதன் முடிவுகள், அதில் தேர்ச்சி பெற்றவர்கள் என அனைத்துக்கும் பொருந்தும்.போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இளைஞர்கள் தங்களது எதிர்காலம் குறித்து கவலை கொண்டுள்ளனர். அவர்களுக்கு இந்நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்வது ஒன்று மட்டும்தான். அது தேர்வு சீர்திருத்தங்கள் சார்ந்து வெளிப்படைத்தன்மை உடன் அரசு செயல்படும் என்பதுதான்” என்றார்.
JSSC-CGL தேர்வு ரத்து செய்யப்பட்டதை அறிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அதை கொண்டாடினர். மேலும், தேர்வு முறைகேடு சார்ந்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.