
புதுடெல்லி: ஆக. 18-
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர் ஷெசாத்பட்டி. இவர் தற்போது பிரேசில், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பை சேர்ந்த இவர், தன்னை சமூக வலைதள பிரபலமாக முன்னிறுத்தி வருகிறார்.
பல்வேறு சமூக வலைதளங்கள் வாயிலாக இந்திய இளைஞர்களை மூளைச் சலவை செய்து அவர்களை தனது குழுவில் ஷெசாத் பட்டி இணைத்து வருகிறார். கடந்த சுதந்திர தின விழாவின்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த ஷெசாத் பட்டி சதித் திட்டம் தீட்டியிருந்தார்.
இதுகுறித்து இந்திய உளவுத் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ரகசிய அறிக்கையை சமர்ப்பித்தது. இதைத் தொடர்ந்து ஷெசாத் பட்டி குழுவை சேர்ந்த அனைவரையும் வேட்டையாட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ரகசிய உத்தரவினை பிறப்பித்தார்.
இதன்பேரில் மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் அனைத்து மாநிலங்களின் காவல் துறைகள் ஒன்றிணைந்து ஷெசாத் பட்டி குழுவை சேர்ந்தவர்களை ரகசியமாக கண்காணித்தன. சுதந்திர தின விழாவுக்கு முன்பாக கடந்த 12-ம் தேதி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன. அப்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புடன் தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 80-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
உத்தர பிரதேசத்தில் 62 பேர், ஹரியானாவில் 52 பேர், டெல்லியில் 51 பேர், பஞ்சாபில் 44 பேர், ராஜஸ்தானில் 15 பேர், மகாராஷ்டிராவில் 8 பேர், உத்தராகண்டில் 5 பேர், கர்நாடகா, குஜராத், பிஹாரில் தலா 3 பேர், தெலங்கானா, இமாச்சல பிரதேசம், காஷ்மீர், கேரளாவில் தலா 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து வெடி பொருட்கள், கையெறி குண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலான ஆயுதங்கள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஐஎஸ்ஐ உளவு அமைப்பு ஆதரவுடன் செயல்பட்ட ஷெசாத் பட்டி குழுவை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முழுமையாக அழித்திருக்கிறது. சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதன்மூலம் அவர்களது தீவிரவாத சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டு உள்ளன. இந்திய பாதுகாப்பு படைகள் ஒன்றிணைந்து செயல்பட்டு 14 மாநிலங்களை சேர்ந்த பல்வேறு நகரங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தின. இதன்காரணமாக சுதந்திர தினத்துக்கு முன்பாக ஷெசாத் குழு கூண்டோடு பிடிபட்டிருக்கிறது. தீவிரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி அரசு மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது.












