ஜீன்ஸ், டி-ஷர்ட்டுடன் ரூ.100, 200 உதவி கேட்ட 9 பெண்கள் கைது

புதுடெல்லி: ஜூன் 21- உத்தரப் பிரதேசம் மாநிலம் பரேலியில் சந்தேகத்திற்கிடமாக 9 பெண்கள் ஜீன்ஸ், டிஷர்ட்டுகள் அணிந்து ரூ.100, 200 உதவி கேட்டனர். இவர்களைப் புகாரின் பேரில் கைது செய்த போலீஸார் யாசகம் கேட்டதாக வழக்குப் பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர்.நேற்று பரேலியின் அயோன்லா – பதான்யு சாலையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அருகே ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டுகள் அணிந்தபடி சந்தேகத்துக்கு இடமான வகையில் 9 பெண்கள் சுற்றித் திரிந்தனர். இவர்கள், தம் முன்னே வழியில் தென்படுவோரிடம் எல்லாம் ரூ.100, 200 தரும்படி உதவி கேட்டுள்ளனர்.
இதற்காக, வீட்டில் பல பிரச்சினைகள் இருப்பதாகக் கூறி, பண உதவி கேட்டு கெஞ்சியுள்ளனர்.இதில் சிலர் அப்பெண்கள் கூறியதை நம்பி அவர்களுக்குப் பணமும் கொடுத்தனர். இவர்களின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த பொதுமக்கள், பரேலி போலீஸுக்கு தகவல் அளித்தனர். இதைப் புகாராக ஏற்ற பரேலி போலீஸார் அந்த 9 பெண்களையும் பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் அனைவரும் குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.