
புதுடெல்லி, செப். 11-
பிரதமர் மோடி நேற்று ஜெர்மனி பிரதமர் பிரைட்ரிச் மெர்சை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, இருநாட்டு உறவு மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
“ஜெர்மனி பிரதமருடன் ஆக்கப்பூர்வமான உரையாடலில் ஈடுபட்டேன். இந்தியாவும், ஜெர்மனியும் 75 ஆண்டுகால தூதரக உறவை கொண்டாடுகின்றன. வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தூய எரிசக்தி, நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் எங்களது கூட்டு உறவை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டோம்.
ஐரோப்பாவுடனான இந்தியாவின் தொடர்புக்கு ஜெர்மனி முக்கியமான தூணாக உள்ளது.
உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளத்தை மேம்படுத்துவதில் ஜெர்மனியை மதிப்புமிக்க கூட்டாளியாகக் கருதுகிறோம்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.













