Home செய்திகள் தேசிய செய்திகள் தங்க கொழுக்கட்டை ரூ.27,000

தங்க கொழுக்கட்டை ரூ.27,000

நாசிக்: செப். 15–-
விநாயகர் சதுர்த்தியையொட்டி, மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ‘சாகர் ஸ்வீட்ஸ்’ என்ற இனிப்புக் கடையில் தங்க முலாம் பூசப்பட்ட இனிப்பு கொழுக்கட்டை விற்பனைக்கு வைக்கப்பட்டது. இதனை வாடிக்கையாளர்கள் வெகுவாக கவனித்து வருகின்றனர். ஒரு கிலோ கொழுக்கட்டை ரூ.27,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்த ஆண்டும் அந்தக் கடையில் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கொழுக்கட்டை, அதன்பிறகு ஒவ்வோர் ஆண்டும் விநாயகர் சதுர்த்தி அன்று விற்பனை செய்யப்படுகிறது. இதைக் காண ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.
கடந்த 2021ல் அறிமுகமானபோது, ஒரு கிலோ ரூ.12,000க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதால், இந்த ஆண்டு கிலோவுக்கு ரூ.27,000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக விலை இருந்தாலும், தரமும் தனித்துவமான தோற்றமும் காரணமாக இதை ஆர்வத்துடன் வாங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
முந்திரி, பாதாம், பிஸ்தா, பாலாடைக்கட்டி, குங்குமப்பூ, ஏலக்காய்த் தூள், நெய் உள்ளிட்ட பொருட்கள் சேர்த்து இந்த கொழுக்கட்டை தயாரிக்கப்படுகிறது. இதன் மீது 24 காரட் தூய்மையான தரம் கொண்ட சாப்பிடக்கூடிய தங்க முலாம் பூசப்படுகிறது. இதைச் சாப்பிடுவதால் மனித உடலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவில் பயன்படுத்தப்படும் தங்கத்துக்கு ஐரோப்பிய யூனியனின் உணவு பாதுகாப்பு அமைப்பும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளது. தூய்மையான தங்கம், மனித உடலின் செரிமான அமிலங்களுடன் எந்தவித வேதிவினையும் புரியாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அது ரத்தத்தில் கலக்காமல், செரிமான மண்டலம் வழியாக அப்படியே கழிவாக வெளியேறும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவர்கள் கூறியபடி, சாப்பிடக்கூடிய தங்கம் செரிமான மண்டலத்தில் உடலுடன் வேதியியல் மாற்றம் ஏற்படுத்தாது. அது ரத்தத்துடன் கலப்பதில்லை. செரிமான அமிலங்களுடன் வினை புரியாததால், உடலில் தங்காமல் கழிவாக வெளியேறும். எனவே, இதன் பயன்பாடு உடல்நலப் பயனுக்காக அல்ல. உடலுக்கு நன்மை அளிக்காத இந்த தங்க முலாம் கொழுக்கட்டை ஆடம்பர மற்றும் காட்சி அழகுக்காக மட்டுமே தயாரிக்கப்படுகிறது. அதன் தனித்துவமான தோற்றமும் தரமும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.