
டெல்லி, ஜன. 20- உலக நாடுகளின் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் டிஜிட்டல் நாணயங்களை ஒருங்கிணைக்கும் புதிய யோசனையை இந்திய ரிசர்வ் வங்கி முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சியின் மூலம், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், சுற்றுலா மற்றும் பிற பரிவர்த்தனைகள் மிகவும் எளிதாகவும், விரைவாகவும் நடைபெற வாய்ப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. அமெரிக்க டாலர் தான் தற்போது உலக அளவில் மிகவும் வலிமையான நாணயமாக திகழ்கிறது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட முக்கியமான சரக்குகளை உலக நாடுகள் டாலரை பயன்படுத்தியே வாங்க வேண்டிய கட்டாயம் இருப்பதே இதற்கான முக்கிய காரணமாகும். இதன் விளைவாக, பல நாடுகள் தங்களது உள்ளூர் நாணயத்தை டாலராக மாற்றிக் கொண்டு, அதன் பின்னரே சர்வதேச வர்த்தகத்தை மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இந்த அமைப்பே அமெரிக்க டாலரை உலகின் ஆதிக்க நாணயமாக மாற்றியுள்ளது. அமெரிக்க டாலர் சர்வதேச வர்த்தகத்தில் டாலரின் இந்த ஆதிக்கம், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்கு பெரும் பலத்தை வழங்கி வருகிறது. இதனை உணர்ந்த பல நாடுகள், சமீப ஆண்டுகளாக டாலரை சார்ந்திருப்பதை குறைப்பதற்கான மாற்று வழிகளை ஆராயத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், டாலரின் ஆதிக்கத்தை சவாலிடும் முயற்சிகளை முதலில் தொடங்கியது சீனா என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். சீனா, தங்கச் சேமிப்பை அதிகரித்து வருவதோடு, தனது நாணயமான யுவானை சர்வதேச அளவில் பயன்படுத்தும் முயற்சிகளையும் தீவிரப்படுத்தி வருகிறது. பிரிக்ஸ் டிஜிட்டல் நாணயம் இதன் தொடர்ச்சியாக, இந்தியாவும் தற்போது டாலரை மையமாகக் கொண்ட வர்த்தக அமைப்பில் இருந்து விலகும் நோக்கில் புதிய யோசனைகளை முன்வைத்து வருகிறது. அதில் முக்கியமானதாக, பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்களது டிஜிட்டல் நாணயங்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் பரிந்துரை கருதப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பு நடைமுறைக்கு வந்தால், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு டாலர் தேவையற்றதாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.













