
வாஷிங்டன், ஜூலை 26- லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அரசு அண்மையில் அறிவித்தது. இந்நிலையில், டிஆர்எப் பிரிவுக்கும், லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் தொடர்பு இல்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது இஷாக் தர் கூறியுள்ளார்.அமெரிக்கா சென்றுள்ள அவர், வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க நாட்டின் வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோவை சந்தித்தார். இந்த சந்திப்பு வாஷிங்டனில் நடைபெற்றது. இதன் பிறகு முகமது இஷாக் தர் கூறியது: “டிஆர்எப் அமைப்பை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அமெரிக்க அரசு அறிவித்தது அவர்களின் இறையாண்மை சார்ந்த முடிவு. அதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. பஹல்காம் தாக்குதலில் அவர்கள்தான் ஈடுபட்டார்கள் என்ற உறுதியான ஆதாரம் இருந்தால் அதை நாங்களும் வரவேற்கிறோம். டிஆர்எப் பிரிவுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் தொடர்பு இல்லை. அப்படி தொடர்புபடுத்துவது தவறானது. ஏனெனில், பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பு அழிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த அமைப்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். டிஆர்எப் வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு: “அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம், தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எப்) அமைப்பை ஒரு வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாகவும் (எப்டிஓ), நியமிக்கப்பட்ட உலகளாவிய தீவிரவாத அமைப்பாகவும் (எஸ்டிஜிடி) அறிவிக்கிறது. தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும், பஹல்காம் தாக்குதலுக்கு நீதி கேட்டும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் விடுத்த அழைப்பைச் செயல்படுத்துவதிலும் அமெரிக்க நிர்வாகம் உறுதியாக உள்ளது” என்று மார்கோ ரூபியோ தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த அறிவிப்பை இந்தியா வரவேற்றது, பாகிஸ்தானுக்கு உடன்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.