
புதுடெல்லி: அக். 16-
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தம் என்று தன்னிடம் பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறி இருந்ததை இந்தியா மறுத்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அமெரிக்காவிடம் இந்தியா எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று விளக்கம் அளித்து இருக்கிறது
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள வெளியுறவு அமைச்சகம், டிரம்பின் அறிக்கையை மறைமுகமாக நிராகரித்து, இந்தியாவின் இறக்குமதிக் கொள்கைகள் நாட்டின் மற்றும் அதன் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதை முழுமையாக நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.
நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதே எங்கள் அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், நாட்டின் எரிசக்தி இறக்குமதிகள் நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னதாக
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று மோடி எனக்கு உறுதியளித்தார். உங்களுக்குத் தெரியும், இதை உடனடியாக செய்ய முடியாது. இது ஒரு சிறிய செயல்முறை, ஆனால் செயல்முறை விரைவில் முடிவடையும்.
ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த இது ஒரு பெரிய படி. இப்போது சீனாவையும் அதையே செய்ய வைக்கப் போகிறோம். மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் ட்ரம்பை நேசிக்கிறார். நான் அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை.
நான் பல ஆண்டுகளாக இந்தியாவைப் பார்த்து வருகிறேன். அது ஒரு நம்பமுடியாத நாடு, ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு ஒரு புதிய தலைவர் அங்கு இருப்பார். ஆனால், என் நண்பர் மோடி நீண்ட காலமாக அங்கு தலைவராக இருக்கிறார்” என்றார்
பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு இத்தகைய உறுதியை அளித்தாரா என்பது குறித்த மின்னஞ்சல் கேள்விகளுக்கு வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

















