டில்லியில் 5 பிரபலபள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுடெல்லி: ஜூலை 16 –
டில்லியில் 5 பிரபல பள்ளிகளுக்கு ஒரே நாளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தலைநகர் டில்லி துவாரகாவில் உள்ள பிரபல பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், எந்த நேரத்தில் வெடிக்கும் என்றும் பள்ளிக்கு ஒரு இ மெயில் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைவரையும் பள்ளியில் இருந்து வெளியேற்றியது.
தகவலறிந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உடன் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இதேபோல, வசந்த குஞ்ச், ஹாஸ்காஸ், பஷ்சிம் விஹார், லோதி எஸ்டேட் ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் திடீர் பரபரப்பும், பதற்றமும் எழுந்தது.
அனைத்து பள்ளிகளுக்கும் சென்ற போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் சோதனை நடத்தியதில் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும் ஒரே நாளில் விடுக்கப்பட்ட இந்த வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய இ மெயில் முகவரியை கைப்பற்றிய போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். நேற்றும் இதேபோன்று டில்லியில் உள்ள 2 பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பின்னர் சோதனையில் அது வெறும் புரளி என்று தெரிய வந்தது. கடந்தாண்டு டிசம்பரில் ஒரே நாளில் கிட்டத்தட்ட 44 பள்ளிகளுக்கு இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.