
புதுடெல்லி: நவ. 12-
டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சிக்னலில் நேற்று முன்தினம் மாலை ஒரு கார் வெடித்துச் சிதறியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். 20-க்கும்
மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சாலையில் வெடித்து சிதறிய காரை, காஷ்மீரின் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி ஓட்டி வந்துள்ளார். குண்டுவெடிப்பில் அவர் உடல் சிதறி உயிரிழந்தார். அவரும் ஹரியானாவின் அல் பலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.
அந்த மருத்துவக் கல்லூரியில் சக மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் உமர் முகமது நபி, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட தனது காரில் டெல்லிக்குள் நுழைந்துள்ளார். போலீஸ் சோதனையில் இருந்து தப்பிக்க கார் இன்ஜின் பகுதியில் அவர் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்தார். இனிமேல் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்த மருத்துவர் உமர் முகமது நபி பதற்றத்தில் டெல்லி செங்கோட்டை அருகே தற் கொலை தாக்குதல் நடத்தி உள்ளார்.
இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறும்போது, “டெல்லி குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு தொடர்பு இருக்கிறது. தற்கொலை படை தீவிரவாதியாக செயல்பட்ட உமர் முகமது நபி உட்பட கைதான அனைத்து மருத்துவர்களும் அந்த அமைப்பின் தீவிர உறுப்பினர்க ளாக இருந்துள்ளனர். புனிதமான மருத்துவத் தொழிலில் கலந்திருந்த தீவிரவாத மருத்துவ கும்பல், உளவுத் துறையின் எச்சரிக்கையால் சிக்கி உள்ளது” என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கு நேற்று தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று 42 முக்கிய தடயங்களை சேகரித்தனர். காஷ்மீரில் சோதனை: காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள மருத்துவர் உமர் முகமது நபியின் வீட்டில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அவரது தந்தை குலாம் நபி கைது செய்யப்பட்டார். தாய் மற்றும் 2 சகோதரர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். உமரின் நெருங்கிய நண்பர் மருத்துவர் சாஜித், காஷ்மீரின் புல்வாமாவில் பணியாற்றி வருகிறார். அவருக்கும் ஜெய்ஷ் இ முகமது அமைப்புடன் தொடர்புஉள்ளது. அவரும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர். ஹரியானாவில் அல் பலா மருத்துவக் கல்லூரியில் கைதான பெண் மருத்துவர் ஷாகினின் அண்ணன் பர்வேஷ் அன்சாரி, உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். அவர் தலைமறைவாகி விட்டார். அவரது வீட்டில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது ஜெய்ஷ் இ முகமது அமைப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இருவரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் ஸ்லீப்பர் செல் ஆக செயல்பட்டு உள்ளனர். உத்தர பிரதேசத்தின் முசாபர் நகரில் உள்ள மதரசாவில் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கிருந்து சிலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.















