டைமண்ட் லீக் தொடரில்… பைனலில் நீரஜ் சோப்ரா

ஜூரிச், ஆகஸ்ட் 19- டைமண்ட் லீக் தொடர் பைனலுக்கு இந்தியாவின் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார். உலக தடகள கூட்டமைப்பு சார்பில் டைமண்ட் லீக் போட்டி நடத்தப்படுகிறது. இதன் 16வது சீசன் தற்போது நடக்கிறது. 2025ல் இதுவரை உலகின் 12 இடங்களில் போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக செயல்பட்ட ‘டாப்-6’ நட்சத்திரங்கள், டைமண்ட் லீக் பைனலில், பங்கேற்க தகுதி பெறலாம். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இரு பதக்கம் (2021ல் தங்கம், 2024ல் வெள்ளி) வென்று தந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, 2025ல் இரு தொடரில் மட்டும் பங்கேற்றார். கத்தாரில் முதன் முதலாக 90 மீ., துாரத்துக்கும் (90.23 மீ.,) மேல் எறிந்து இரண்டாவது இடம் (7 புள்ளி) பிடித்தார். அடுத்து பாரிசில் 88.16 மீ., துாரம் எறிந்து, முதலிடம் (8 புள்ளி) பிடித்தார். இரு தொடரில் மொத்தம் 15 புள்ளி பெற்ற நீரஜ் சோப்ரா, தற்போது பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். முதல் இரு இடத்தில் கெஷ்ஹார்ன் (டிரினிடாட் அண்டு டுபாகோ, 17 புள்ளி), ஜூலியன் வெப்பர் (ஜெர்மனி, 15) உள்ளனர். ஆண்டர்சன் (கிரனடா, 13), ஜூலியஸ் எகோ (கென்யா, 11), அன்ட்ரியன் (மால்டோவா, 8) 4, 5, 6வது இடத்தில் உள்ளனர். இன்னும் இரு தொடர் (சுவிட்சர்லாந்து, பெல்ஜியம்) தொடர் மட்டும் மீதமுள்ள நிலையில், ‘டாப்-3’ இடம் பிடித்த நீரஜ் சோப்ரா உள்ளிட்ட மூவரும், டைமண்ட் லீக் பைனலுக்கு தகுதி பெற்றனர். இப்போட்டி வரும் 27-28ல் சுவிட்சர்லாந்தின் ஜூரிச்சில் நடக்க உள்ளது.