
சென்னை: மே 8-
மேஜிக் எண் 118-ஐ எட்டமுடியாமல் தவித்து வருகிறது தவெக. விஜய் எதிர்பார்க்கும் கட்சிகள் இதுவரை பச்சைக் கொடி காட்டாததாலும், ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்காததாலும் பதற்றத்தில் தவிக்கிறது தமிழக அரசியல் களம்.
தமிழக வரலாற்றில் முதன்முறையாக தொங்கு சட்டப்பேரவை அமைந்துள்ளது. தவெகவுக்கு 108 இடங்கள் உள்ள நிலையில், காங்கிரஸ் கூட்டணிக்குள் வந்ததால் மேலும் 5 இடங்கள் கிடைத்துள்ளது. ஆனாலும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவெகவுக்கு இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
இந்தச் சூழலில்தான், தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரிக்கை வைத்தார் விஜய். ஆனாலும், பெரும்பான்மை உறுப்பினர்களின் பட்டியலை சமர்பிக்காததால், இதுவரை விஜய்யை ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்கவில்லை.
இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியான நிலையில், ஆளுநர் தரப்பில் வெளியான தகவலில், ‘தமிழக ஆளுநர், தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் மாளிகைக்கு அழைத்து, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது இன்றியமையாதது. ஆட்சியமைக்க தேவையான அந்தப் பெரும்பான்மை எண்ணை நீங்கள் காட்டவில்லை என ஆளுநர் விளக்கினார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், ‘தனிப்பெரும் கட்சியாக உள்ள தவெகவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும், பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபித்தால் போதுமானது; இதில் பாஜகவின் தூண்டுதலோடு ஆளுநர் அரசியல் செய்கிறார்’ என ஒரு சில கட்சிகள் வெளிப்படையாகவே குற்றம்சாட்டுகின்றன.
ஆனால், ‘தவெக தனிப்பெரும் கட்சியாக நாங்கள் உள்ளோம், அதனடிப்படையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கவில்லை. மாறாக காங்கிரசின் 5 உறுப்பினர்கள் ஆதரவை காட்டி, தேர்தலுக்கு பிந்தைய எங்கள் கூட்டணிக்கு 113 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது என குறிப்பிட்டு கோரிக்கை வைத்துள்ளார். இதன் காரணமாகவே ‘118’ பேரின் ஆதரவு கேட்கப்படுகிறது’ என ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


















