
நியூயார்க், ஜூலை 16- ‘’ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்’’ என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் தெரிவித்தார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நடந்த உயர்மட்ட ஆலாசனை கூட்டத்தில், இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ் பேசியதாவது: ஐக்கிய நாடுகளின் அமைதி காப்பு படையினருக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்படும் வழக்குகளில் நீதி கிடைக்க வேண்டும். ஆபத்து மிகுந்த போர்க்களங்களில் அமைதி காக்கும் பணி மேற்கொள்ளும் ஐ.நா., படையினரின் பணி, மிகுந்த சிக்கலானது. ஆனால், ஐ.நா., படையினர் தாக்கப்படும் குற்றங்களில், பெரும்பாலானவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. இத்தகைய பொறுப்பற்ற தன்மை, சர்வதேச அமைதி காப்பு நடவடிக்கைகளை கடுமையாக பாதிக்கிறது. குற்றவாளிகளை ஊக்குவிப்பதாக உள்ளது. எனவே, ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இதை நிறைவேற்றுவது நமது பொதுவான கடமை. உலகளாவிய ஐ.நா. அமைதி நடவடிக்கைகளின் செயல்திறனும், நம்பகத்தன்மையும் தான் நமது எதிர்காலத்திற்கான அடிப்படையாகும். இவ்வாறு அவர் பேசினார்.