
சென்னை: ஜனவரி 26 –
சென்னையில் நேற்று இரவு மழை பெய்த நிலையில் இன்று காலையிலும் ஒரு சில இடங்களில் மழை தொடர்ந்து பெய்தது. இந்த நிலையில் இன்றும் சென்னையில் மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து 4வது நாளாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னையிலும் லேசான மழை பெய்தது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று நள்ளிரவிலும் லேசான மழை பெய்த நிலையில் இன்று காலையிலும் தூறலாக மழை தொடர்ந்தது.
சென்னை கோடம்பாக்கம், வடபழனி, சூளைமேடு, அண்ணாநகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு பகுதிகளில் காலையிலேயே மழை பெய்தது. ஒரு சில இடங்களில் சாலையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் அளவுக்கு மழை பெய்தது. இந்த நிலையில் மழை இன்றும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை மையம் கூறியிருப்பதாவது:- குமரிக்கடல் பகுதிகளிலிருந்து வடக்கு கேரள கடலோரப்பகுதிகள் வரை ஒரு கிழக்கு வளிமண்டல காற்றலை நிலவுகிறது. இதனால் உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் இன்று கிளைமேட் எப்படி? வரும் 27 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28-01-2026 முதல் 31-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகள்: 26-01-2026 முதல் 29-01-2026 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வங்கக்கடல் பகுதிகள்: 26-01-2026 முதல் 29-01-2026 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. என்று கூறப்பட்டுள்ளது.













