சென்னை: பிப்ரவரி 28 சேலம், தர்மபுரி உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில், கள்ளச்சாராய விற்பனை மீண்டும் தலை துாக்குவதால், ஊறல்கள் அழிப்பு உள்ளிட்ட பணிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த, 2001ல், கடலுார் மாவட்டம் பண்ருட்டியில் கள்ளச்சாராயம் குடித்து, 53 பேர் இறந்தனர். மேலும், 200க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பறிபோனது. அதே ஆண்டு, சென்னை செங்குன்றம், கோட்டூர் உள்ளிட்ட இடங்களில், கள்ளச்சாராயம் குடித்து, 30 பேர் இறந்தனர். அதன்பிறகு, தமிழகத்தில் கள்ளச் சாராயத்திற்கு எதிராக, போலீசாரின் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. எனினும், 2023ல், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கள்ளச்சாராயம் குடித்து, 21 பேர் இறந்தனர்.
கடந்த ஆண்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் மற்றும் சின்ன சேலம் அடுத்த மாதவச்சேரி பகுதியில், கள்ளச்சாராயம் குடித்து, 69 பேர் உயிரிழந்தனர். எத்தனால் காரணமாக, இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர். ஆனால், மாநிலத்தின் பல பகுதிகளில், ஊறல் போட்டு, கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் தொழில், அமோகமாக நடக்கிறது.
சமீபத்தில் போலீசார் நடத்திய ஆய்வில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்களில், கள்ளச்சாராய விற்பனை, மீண்டும் தலைதுாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, சாராய ஊறல் அழிப்பு மற்றும் கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்யும் பணியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கள்ளச்சாராய ஒழிப்பு பணியில், சட்டம், ஒழுங்கு மற்றும் மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் இணைந்து செயல்பட, திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இப்பணியில் ஈடுபடும் போலீசார், கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது குறித்து, தகவல் கிடைத்தால், உடனேயே சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்ல வேண்டும். கள்ளச்சாராய ஒழிப்பு பணியில், வருவாய் துறை, வனத்துறை அதிகாரிகள், போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.