தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்பு

சென்னை: ஜூலை 18 –
காமராஜர் குறித்து திமுக எம்.பி. திருச்சி சிவா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பை காக்கும் வகையில் தான் கருத்துகளை பகிர வேண்டும். வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
காமராஜர் 123-வது பிறந்தநாள் கடந்த 15-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை பெரம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. உரையாற்றினார். “முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ‘தமிழகத்தில் மின்சார தட்டுப்பாடு குறித்து மாநிலம் தழுவிய அளவில் காமராஜர் கண்டன கூட்டம் நடத்தினார். அவருக்கு ஏசி இல்லாவிட்டால் உடலில் ஒவ்வாமை ஏற்படும். நம்மை எதிர்த்துதான் அவர் பேசுகிறார். ஆனால், அவரது உடல்நலம் கருதி அவர் தங்கும் அனைத்து பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதி செய்ய சொன்னதாக கருணாநிதி கூறினார்” என்று சிவா தனது பேச்சில் குறிப்பிட்டார்.
காமராஜர் குறித்து திருச்சி சிவா இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, திருச்சி சிவா நேற்று முன்தினம் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது. பெருந்தலைவர் காமராஜர் மீது மிகுந்த மரியாதையும், பெருமதிப்பும் கொண்டவன் நான். இந்த விளக்கத்தை ஏற்று, நான் பேசியதை மேலும் விவாதப் பொருள் ஆக்க வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தலைவர்கள் நேற்றும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: காமராஜர் மீது நெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சையை உருவாக்கி, அதன்மூலம் காமராஜரின் புகழை மழுங்கடிக்க துடிக்கும் அற்ப அரசியல் செய்கிறது திமுக.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: காமராஜர் குறித்து பேச சிவாவுக்கு தகுதி இல்லை. அவர் ஆதாரமின்றி பேசுவதை விவாதமாக்க வேண்டாம்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தனது ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான காமராஜர் மீது காங்கிரஸ் கட்சியே தீரா காழ்ப்பில்தான் உள்ளது. அதனால்தான், காமராஜரை திமுக கொச்சைப்படுத்தும் போதெல்லாம், பெயருக்குக்கூட கண்டனம் தெரிவிக்காமல், உள்ளூர ரசித்தபடியே கூட்டணியில் தொடர்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.