
சென்னை: அக். 18-
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 176 மிமீ மழை பதிவாகி உள்ளது.
வங்கக்கடலில் அக்டோபர் 24ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வலுவடையக் கூடும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தமிழகத்தில் அனேக இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் வரும் அக் 23ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தேனி, தென்காசி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.