சென்னை: ஜனவரி 3-
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் நடைபெற்றன. அதன்பின், கடந்த டிச.19-ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும், தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். பட்டியலில் இருந்து 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர். முகவரியில் இல்லாதவர்கள் என 66.44 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டிச.19 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தகுதியானவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்து வருகின்றனர். நிரந்தரமாக இடம்பெயர்ந்ததாக, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 66.44 லட்சம் பேரும், தங்கள் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்க வேண்டியுள்ளது. அதனால் பொதுமக்கள் வசதிக்காக விடுமுறை நாட்களான கடந்த டிச.27, 28-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் 75,000 வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
இதில் 27-ம் தேதி 2.56 லட்சம் பேரும், 28-ம் தேதி 2.86 லட்சம் பேர் என மொத்தம் 5.43 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 7.37 லட்சம் பேர், 9,535 பேர் பெயர் நீக்கம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து இன்றும் (ஜன.3), நாளையும் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
ஜனவரி 1-ம் தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் எஸ்ஐஆர் பணியில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் படிவம் 6-ஐ வழங்க வேண்டும். அத்துடன் உறுதிமொழி படிவத்தையும் வழங்க வேண்டும். அதில் எஸ்ஐஆர் படிவத்தில் உள்ளதை போன்றே, தங்களது அல்லது தங்கள் பெற்றோரின், 2002, 2005 காலகட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை குறிப்பிட வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை நீக்க படிவம் 7, ஒரே தொகுதியில் முகவரி மாற்றம், பெயர் உள்ளிட்டவற்றில் உள்ள பிழைகள் திருத்தம், வேறு மாவட்டம் மாறி இருந்தாலும் படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.இந்நிலையில், ஏற்கெனவே இப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பணி சுமை ஏற்படுவதை தடுக்க 234 தொகுதிகளுக்கும் கூடுதலாக உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி சிறப்பு வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்ளிட்டோர் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜன.18-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த விண்ணப்பிக்கலாம். பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

















