டெல்லி, ஜூலை 14- பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் (Special Intensive Revision – SIR) நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் இதை எதிர்த்து வழக்கும் கூட தொடர்ந்திருந்தனர். இருப்பினும், இந்தச் சர்ச்சை ஓய்வதற்குள்ளேயே நாடு முழுவதும் இந்த நடைமுறையைச் செயல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்தச் சூழலில் தேர்தல் ஆணையம் திடீரென அங்குச் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு இந்தச் செயல்முறை நடப்பதால் இது சர்ச்சையானது. அங்குள்ள பல்வேறு எதிர்க்கட்சிகளும் இதை எதிர்த்தனர். நீதிமன்றத்தில் வழக்கு சுப்ரீம் கோர்ட்டிலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாததால், தகுதிவாய்ந்த குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை பறிபோகும் என்று கூறி, எதிர்க்கட்சிகள் மற்றும் சில அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் இந்தச் சிறப்புத் திருத்தத்திற்கு எதிராக மனுத் தாக்கல் செய்திருந்தன. இருப்பினும், இந்தச் சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இருப்பதாகக் கூறிய சுப்ரீம் கோர்ட், இந்த நடைமுறையைத் தொடரவும் அனுமதி அளித்தது. எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள போதிலும், சுப்ரீம் கோர்ட் அனுமதியால் தேர்தல் ஆணையம் இதைத் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளது. அமித் ஷா திட்டவட்டம் இந்த நடைமுறையால் வாக்காளர் உரிமை பறிபோவதாக எதிர்க்கட்சிகள் சாடினர். இருப்பினும், இதை மறுத்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த நடைமுறையில் யாருக்காவது ஆட்சேபணை இருந்தால், அவர்கள் தேர்தல் ஆணையத்தை அணுக வேண்டும். வாக்காளர் பட்டியல் திருத்தம் இப்போது புதிதாக நடக்கவில்லை. இது 1991ம் ஆண்டும் நடந்தது. மேலும், இது பீகாரில் மட்டும் நடக்கவில்லை. நாடு முழுவதும் நடக்கும் என்று நினைக்கிறேன். இந்த விஷயம் உச்ச நீதிமன்றத்தில் உள்ளது” என்றார். எதிர்க்கட்சிகள் குறித்துப் பேசிய அமித் ஷா, “தேர்தல் ஆணையம் எதைச் செய்தாலும் அவர்கள் எதிர்ப்பார்கள். தேர்தலில் தோல்வியடைந்ததை நியாயப்படுத்த அவர்கள் இதுபோல பொய்யான கற்பனையான காரணங்களைக் கூறுகிறார்கள்.















