
சென்னை: மே 29-
கோடை வெப்பத்தால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி சார்பில் 360 சுகாதார நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடைவெப்பம் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும்போது உடலில் உப்புச்சத்து மற்றும் நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதனால் அதிக தாகம், தலைவலி, உடல்சோர்வு, தலைசுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்த அளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். பச்சிளம் குழந்தைகள், சிறுவயது குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் அதிகளவில் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
அதிக அளவில் மோர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக்கஞ்சி, இளநீர், உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஓஆர்எஸ் உப்புக்கரைசல் ஆகியவற்றை பருக வேண்டும். வெளியே செல்லும்போது, திறந்தவெளியில் வேலை செய்யும்போது தலையில் பருத்தி துணி, துண்டு, தொப்பி அணிந்து கொள்ள வேண்டும். தேவையில்லாமல் வெயிலில் வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
தீவிர மயக்கம், உடல் சோர்வு, அதிக அளவு தாகம், தலைவலி, கால், மணிக்கட்டு அல்லது அடி வயிற்றில் வலி ஏற்பட்டால் மருத்துவ உதவியை நாடவேண்டும். நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு, சுவாசம் ஆகியவற்றை பரிசோதிக்க வேண்டும்.


















