
பெங்களூரு: ஆக. 21-
தர்மஸ்தலா வழக்கின் பின்னணியில் நான் இல்லை,” என, தமிழக காங்., – எம்.பி., சசிகாந்த் செந்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், ”இது தொடர்பான விசாரணைக்கு சசிகாந்த் செந்தில் தயாரா?” என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சவால் விடுத்துள்ளார்.
தர்மஸ்தலா வழக்கின் பின்னணியில், தமிழகத்தின் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் சதி உள்ளதாக, கர்நாடக பா.ஜ., முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான ஜனார்த்தன ரெட்டி நேற்று முன்தினம் பகீர் தகவல் கூறினார்.
இதற்கு சசிகாந்த் செந்தில் நேற்று அளித்த விளக்கம்:
தர்மஸ்தலா வழக்கில் ஜனார்த்தன ரெட்டி என் மீது கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. பல்லாரியில் நான் உதவி கலெக்டராக இருந்த போது, கனிம சுரங்க முறைகேடு வழக்கில் ஜனார்த்தன ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் கைதான வழக்கில் சில ஆவணங்களை திரட்டி கொடுத்ததால், என் மீதுள்ள கோபத்தில் அவர் குற்றஞ்சாட்டி இருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்து, பெங்களூரில் ஜனார்த்தன ரெட்டி நேற்று அளித்த பேட்டி:
சசிகாந்த் செந்திலை இதுவரை நான் நேரில் பார்த்தது இல்லை. அவர் பல்லாரியில் உதவி கலெக்டராக இருந்த போது, கனிம சுரங்க வழக்கில் நான் கைது செய்யப்பட்டதாகக் கூறுவது பொய். நான் கைதாகும் போது, அவர் பல்லாரியில் வேலை செய்யவில்லை.
தர்மஸ்தலா வழக்கில் புகார் அளித்தவர், மகள் அனன்யா பட் மாயமானதாக புகார் அளித்த சுஜாதா பட் ஆகியோரை பின்னால் இருந்து இயக்கியவர்கள் சில யு – டியூபர்கள். அவர்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொடுத்தவர் சசிகாந்த் செந்தில்.அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றால், ‘எத்தகைய விசாரணைக்கும் உத்தரவிடுங்கள்; அதை எதிர்கொள்ள தயாராக உள்ளேன்’ என சொல்லட்டும். தர்மஸ்தலா வழக்கில் பின்னணியில் உள்ளவர்களை பற்றி காங்கிரஸ் கூறாவிட்டால், நீதிமன்றம் மூலம் சட்டப் போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.