தர்மஸ்தலா முகமூடி நபர் கைது

மங்களூர்: ஆக. 23-
தர்மஸ்தலா விவகாரத்தில் இன்று மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. தர்மஸ்தலாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக கூறி வந்த முகமூடி அணிந்த நபர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் இதுவரை கூறி வந்த அனைத்தும் பொய் தகவல் என்று விசாரணையில் அம்பலமானதை தொடர்ந்து சிறப்பு விசாரணைக் குழு போலீசார் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட முகமூடி அணிந்த நபரின் பெயர் சின்னையா என்கிற சின்னப்பா இவர் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்.
19 மணி நேர தொடர் விசாரணைக்குப் பிறகு, தர்மஸ்தலா சுற்று சுற்று வட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான உடல்களை புதைத்ததாக ஒரு கதையை புனைந்த சின்னையாவை சிறப்பு விசாரணைக் குழு கைது செய்து பெல்தங்கடி கூடுதல் சிவில் மற்றும் ஜே.எம்.எஃப்.சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மேலும் விசாரணைக்காக காவலில் ஒப்படைக்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார். பல மணி நேர தொடர் விசாரணைக்குப் பிறகு முகமூடி அணிந்த நபர் சின்னையாவ் எஸ்.ஐ.டி போலீசார், இன்று காலை கைது செய்தனர், கைது செய்யப்பட்ட சின்னையாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பெல்தங்கடி தாலுகா மருத்துவமனையில் அவரது மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட முகமூடி அணிந்த சின்னையா என்கிற சின்னப்பா, மனித எலும்புக்கூட்டை போலீசாரிடம் கொண்டு வந்து தர்மஸ்தலா குறித்து பரபரப்பு புகாரை கூறினார். நூற்றுக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும் பல உடல்களை தானே புதைத்ததாகவும் போலீசில் புகார் கூறினார் இது கர்நாடகத்தை தாண்டி அகில இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு விசாரணைக் குழுவை கர்நாடக மாநில அரசு அமைத்தது . இந்த விவகாரத்தில் கர்நாடகா அரசியலிலும் அனல் பறந்தது காங்கிரஸ் மற்றும் பிஜேபி இடையே கடும் வாக்குவாதங்கள் நடந்து வந்தது.


முகமூடி அணிந்த சின்னையாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வுக் குழு கடந்த சில நாட்களில் அவர் சுட்டிக்காட்டிய 17 இடங்களில் பூமியைத் தோண்டி உடல்களைத் தேடினர்.
இரண்டு இடங்களில் ஒரு எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டாலும், மற்றொரு இடத்தில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. அதைத் தவிர, அவர் குறிப்பிட்ட இடங்களில் எந்த உடல்களும் கிடைக்கவில்லை. பின்னர், அதிகாரிகள் தோண்டும் பணியை நிறுத்திவிட்டு, முகமூடி அணிந்த சின்னையாவையே விசாரித்தனர். சிறப்பு விசாரணைக் குழு தலைவர் டிஜிபி பிரணவ் மொஹந்தி முன்னிலையில், சிறப்பு விசாரணைக் குழு நேற்று மதியம் 2 மணி முதல் முகமூடி அணிந்த நபரிடம் விசாரணை நடத்தி வந்தது. முகமூடி அணிந்த நபர் பொய் சொல்லி ஒரு கதையை உருவாக்கியது கண்டுபிடிக்கப்பட்டவுடன், காவல் துறையினர் முகமூடி அணிந்த நபரை இன்று கைது செய்தனர்.
இவரது பின்னணியில் இருப்பது யார்? இவரை இயக்குவது யார்? இவரை ஏவி விட்டது யார் என்று பல்வேறு கோணங்களில் சிறப்பு விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

யூடியூபர் சமீருக்கு போலீசார் நோட்டீஸ்: தர்மஸ்தலா குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்த சமீருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்
மங்களூரு மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய போதிலும், தர்மஸ்தாலா காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால், யூடியூபர் சமீரின் வீட்டிற்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்த சூழலில், வீட்டின் சுவரில் ஒரு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். பெங்களூரு ஜிகானியில் உள்ள ஹுல்லஹள்ளியில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு மற்றொரு போலீஸ் குழு சென்றபோது, ​​கதவும் பூட்டப்பட்டிருந்தது, எனவே அந்த வீட்டின் சுவரிலும் போலீசார் ஒரு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
முன்னதாக, பெல்தங்கடியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தொடர்பாக வீடியோ எடுத்ததற்காக பெல்லாரியில் உள்ள கவுல் பஜார் காவல் நிலையத்தில் சமீர் எம்.டி. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அப்போது கூட அதே வீட்டிற்கு வந்திருந்த போலீசார், பின்னர் பெங்களூரு சென்று நோட்டீஸ் வழங்கினர். ஆதார் அட்டையில் சமீரின் முகவரி இதுவரை பெல்லாரி என்று குறிப்பிடப்பட்டிருந்த பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, ​​சமீரின் தூரத்து உறவினர்கள் இந்த வீட்டில் வசித்து வருகின்றனர். தற்போது சமீரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் இந்த வீட்டில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. போலீசார் ஒட்டியுள்ள நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது
தர்மஸ்தலா காவல் நிலையத்தில் பிரிவு 240,192, 353(1) BNS-2023 வழக்கில் விசாரணை செயல்முறை தொடர்பாக 28-07-2025, 02-08-2025 மற்றும் 13-08-2025 ஆகிய தேதிகளில் விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு உங்களுக்கு ஏற்கனவே தனிப்பட்ட அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் ஆஜராகவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், 21-08-2025 அன்று மங்களூரு மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து நீங்கள் முன்ஜாமீன் பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. எனவே, 21-08-2025 அன்று நீதிமன்றம் வழங்கிய முன்ஜாமீன் உத்தரவின் நிபந்தனையின்படி, நீங்கள் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அந்த நிபந்தனைக்கு உட்பட்டு, 24-08-2025 அன்று காலை 10 மணிக்கு பெல்தங்கடி கிராமப்புற வட்ட காவல் நிலையத்தில் உள்ள விசாரணை அதிகாரி முன் தவறாமல் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என்று கூறப்பட்டுள்ளது

பிணங்களில் இருந்து நகை திருடும் ஆசாமி :தர்மஸ்தலா குறித்து பொய் தகவல்கள் பரப்பிய வழக்கில் முகமூடி அணிந்த சி.என். சின்னையா என்கிற சென்னாவின் சொந்த ஊர் மற்றும் பின்னணியை சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) வெளியிட்டு உள்ளது. இவர் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர்.
இவரது பெயர் சின்னையா, ஆற்றில் மூழ்கிய உடல்களிலிருந்து மூக்குத்திகள், காதணிகள் மற்றும் கழுத்தணிகளைத் திருடுவார், அதனால்தான் அவர் சின்னப்பா மற்றும் சின்னனா என்று அழைக்கப்பட்டார். என்று தெரியவந்துள்ளது