
மதுரை: மே 18 –
தவெக ஆட்சியில் அதிமுக, பாஜக ஆதரவாளர்களுக்கே அரசு வழக்கறிஞர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தவெக வழக்கறிஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வை சேர்த்து அரசு தலைமை வழக்கறிஞர், அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர், அரசு சிறப்பு வழக்கறிஞர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள், உரிமையியல், குற்றவியல் அரசு வழக்கறிஞர்கள் என 180 அரசு வழக்கறிஞர் பதவிகள் உள்ளன.
இப்பதவிகளில் ஆளும் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் நியமிப்பது வழக்கம். திமுக ஆட்சியின்போது அரசு வழக்கறிஞர்களாக இருந்தோர் தவெக ஆட்சிக்கு வந்ததும் பதவி விலகினர். இந்நிலையில், தலைமை அரசு வழக்கறிஞராக விஜய் நாராயணன், அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞராக ஜான் சத்யன், கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக பி.வி.பாலசுப்பிரமணியம், டி.கவுதமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அதிமுக, பாஜக ஆதரவாளர்கள் ஆவர்.
இவர்களில் விஜய் நாராயணன் அதிமுக ஆட்சியில் 2017 முதல் 2021 வரை தலைமை அரசு வழக்கறிஞராக இருந்தார். பாலசுப்பிரமணியம், கவுதமன் ஆகியோரும் அதிமுக ஆட்சியில் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக இருந்தனர். அதிமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களாக இருந்தவர்களை, தவெக ஆட்சியிலும் அரசு வழக்கறிஞர்களாக நியமித்தது தவெக வழக்கறிஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து தவெக வழக்கறிஞர்கள் கூறியதாவது: விஜய் கட்சி தொடங்கி 3 மாநாடுகள் வரை பிரச்சினை இல்லாமல் போனது. கரூர் மாநாட்டில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தால் விஜய்யை அனைவரும் கைவிட்டனர். அப்போது, விஜய்க்கு பக்கபலமாக இருந்து அவரைப் பாதுகாத்தது தவெக வழக்கறிஞர் அணிதான்.
கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்த 217 தவெகவினர், திமுக ஆட்சியில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 5,328 தவெகவினர் கைது செய்யப்பட்டனர். தவெக வழக்கறிஞர் அணி தமிழகம் முழுவதும் பயணம் செய்து கைதாகியிருந்த கட்சியினர் ஜாமீனில் வர உதவியது.

















