
திருமலை: டிசம்பர் 30 –
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 1.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அனைத்து வைஷ்ணவ கோயில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமியை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர், பக்தர்கள் சொர்க்க வாசலில் அனுமதிக்கப்பட்டனர். சொர்க்க வாசலில் விதவிதமான மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.ஏழுமலையானின் கற்ப கிரக சன்னதிக்கு ஒட்டியபடி பக்தர்கள் சொர்க்க வாசல் வழியே உள்ளே சென்று உண்டியல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் வெளியே வருகின்றனர்.
சொர்க்க வாசல் முழுவதும் ஸ்ரீவாரி சேவகர்கள், விஜிலென்ஸ் ஊழியர்கள் நின்றபடி பக்தர்களை வரிசையாகவும், விரைவாகவும் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோயிலுக்கு வெளியே அஷ்ட லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் கோயிலுக்குள் மலர் அலங்காரம் கண்ணை கவரும் விதத்தில் உள்ளது. இரவு நேரத்தில் திருமலை முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.
வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஜன.1-ம் தேதி ஆங்கில புத்தாண்டு என வரிசையாக 30, 31 மற்றும் ஜன. 1-ம் தேதி மட்டும் திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே குலுக்கல் முறையில் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு வழங்கிவிட்டது.
இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 70 ஆயிரம் சாமானிய பக்தர்கள் சுவாமியை தரிசித்து வருகின்றனர். 2-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை எவ்வித டோக்கன்களோ டிக்கெட்டுகளோ இல்லாமல் பக்தர்கள் தர்ம தரிசனம் மூலம் சுவாமியை தரிசிக்கலாம் என திருப்பதி தேவஸ்தானம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.




















