திருப்பதி லட்டு கலப்படம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

ஆந்திரா: பிப்ரவரி 11-
ஆந்திராவில் முன்பு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிக்க வினியோகிக்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பகிரங்க குற்றம் சாட்டினார். இதனால் உலகம் முழுவதும் பக்தர்களிடையே அதிர்ச்சி ஏற்பட்டது. முந்தைய ஆட்சிக்காலத்தில் சுமார் ரூ.250 கோடி
மதிப்புள்ள 60 லட்சம் கிலோ கலப்பட நெய் தேவஸ்தானத்துக்கு வினியோகிக்கப்பட்டதாக திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு கூறினார்.
இவ்விவகாரம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. நெய் என்ற பெயரில் விநியோகிக்கப்பட்ட பொருள், ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்ட பாமாயில் மற்றும் இதர பொருட்கள் என்று சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்தது.
இதுதொடர்பாக சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில், 9 தேவஸ்தான அதிகாரிகள், 5 பால்வள நிபுணர்கள் உள்பட 36 பேர் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இந்நிலையில், அமலாக்கத்துறையும் தனியாக ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளது. திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்தும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டவிரோதமாகதிரட்டிய பணம் குறித்தும் விசாரிக்க இந்த வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த விசாரணைக்காக சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கு, ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை ஆய்வு செய்து வருவதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.ஹவாலா பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.