
மதுரை: ஜனவரி 6-
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. தனிநீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகும் என்று இருநீதிபதிகள் கொண்ட அமர்வில் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை எழுமலையைச் சோ்ந்த இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் காா்த்திகை திருவிழாவன்று தீபம் ஏற்ற கடந்த மாதம் 1 ஆம் தேதி உத்தரவிட்டாா். ஆனால், சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் என்று கருதி அன்றைய தினம் தீபம் ஏற்றப்படவில்லை.
இதைதொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ராம ரவிக்குமாா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் மீண்டும் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கு உத்தரவிட்டார். ஆனால், அப்போதும் மலை அடிவாரத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. இதையடுத்து, நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தமிழக அரசின் தலைமைச் செயலா், ஏடிஜிபி ஆகியோரை காணொலி வாயிலாகவும், மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், கோயில் செயல் அலுவலா் ஆகியோா் நேரிலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கிடையே, அரசுத் தரப்பில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஒருவாரம் தொடர்ந்து மேல்முறையீட்டு மனுக்கள், இடையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. அரசுத் தரப்பு, கோயில் செயலா் அலுவலா், சிக்கந்தா் தா்கா, வக்ஃப் வாரியம், ஜமாத், மனுதாரா் ராம ரவிக்குமாா், இடையீட்டு மனுதாரா்கள் என பலர் ஆஜராகி உயர்நீதிமன்றத்தில் தங்களுடைய தரப்பு கருத்துகளை கூறினர். இதையடுத்து, வழக்கு தீா்ப்புக்காக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் கந்தூரி விழா தொடங்கியது. இதையடுத்து, மதுரையைச் சேர்ந்த மாணிக்கம் மூர்த்தி என்பவர் கந்தூரி விழாவையொட்டி மலை உச்சியில் ஆடு, மாடுகள் பலியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி விசாரித்தார். அப்போது, மலை உச்சியில் விலங்குகளை பலியிடக் கூடாது, அசைவ உணவுகள் பரிமாறக் கூடாது, இறைச்சிகளை எடுத்து செல்லக் கூடாது என கடந்த 2 ஆம் தேதி உத்தரவிட்டார். இதையடுத்து, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா தரப்பு வழக்கறிஞர்கள் கந்தூரி விழா தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேம்டும் என்று கூறி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடா்பான மேல்முறையீட்டு வழக்கில் செவ்வாய்க்கிழமையான இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளால், இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்று தெரிவித்தனர். இந்த வழக்குத் தொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்ததிகை தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. தனிநீதிபதியின் உத்தரவு செல்லுபடியாகும் என்று இருநீதிபதிகள் கொண்ட அமர்வில் உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கில் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்துள்ளது ஜிஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அரசியல் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்படக் கூடாது. தீபமேற்றும்போது யாரை அனுமதிக்கலாம் என காவல் துறை, தொல்லியல் துறை, தேவஸ்தானம் முடிவு செய்யலாம். தீபமேற்றும்போது பொதுமக்களை அனுமதிக்க கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
















