திருமணத்திற்கு மறுத்த காதலனிடம் நடுரோட்டில் இளம்பெண் சண்டை

கோவை :ஜூலை 8-
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் நேற்று மக்கள் குறைத்தீர்ப்பு முகாம் நடைபெற்றதால் பரபரப்பாக காணப்பட்டது. குறைத்தீர்ப்பு முகாம் முடிந்து மக்கள் கூட்டம் குறைந்தது. மாலை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் பணிகளை முடித்து வீடுகளுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு இளம் காதல் ஜோடி பேசி கொண்டு இருந்தனர். அவர் திடீரென பொதுமக்கள் முன்னிலையில் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டு கொண்டனர்.சிறிது நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்தது. அதில் ஆத்திரம் அடைந்த அந்த இளம்பெண், தனது காதலனின் முகத்தில் ஓங்கி குத்தினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.கலெக்டர் அலுவலகம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அங்கு வந்து இருவரையும் தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர்.விசாரணையில், வடவள்ளியை சேர்ந்த அந்த பெண்ணை, திருப்பூர் அவிநாசிபாளையத்தைச் சேர்ந்த இளைஞர் கடந்த 9 மாதமாக கோவையில் தனியாக வீடு எடுத்து தங்க வைத்து இருந்ததாகவும், திருமணம் செய்வதாகக் கூறி குடும்பம் நடத்தி விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாகவும் கூறினார். மேலும், அந்த இளைஞரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் வந்தால் மட்டுமே தான் அங்கிருந்து செல்வேன் என அந்த பெண் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அந்த இளம்பெண்ணை சமாதானம் செய்து இருவரையும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு போலீசார் இருவரது குடும்பத்தினரையும் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாங்களுக்கு முன்பு கோவை விமான நிலையத்தில் ஒரு இளம்பெண், தன்னை காதலித்த வாலிபர் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதாக தகராறில் ஈடுபட்ட வீடியோ வைரலானது. தற்போது கலெக்டர் அலுவலம் முன்பு காதல் ஜோடி இருவரும் நடு ரோட்டில் சண்டையிட்ட கொண்ட சம்பவம் அப்பகுதியில் நடந்து சென்ற மக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவ தொடங்கியுள்ளது.